நூல் அறிமுகம்
புறப்பொருளைப் பற்றிக் கூறும் நானூறு பாடல்களைக் கொண்டமையின் (கடவுள் வாழ்த்தொடு) புறநானூறு எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனாராலும் மற்ற 399 பாக்களும் முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கோவூர்கிழார் ஈறாகவுள்ள 157 பல்வேறு காலத்துப் புலவர்களால் இயற்றப்பெற்றுள்ளன. இந்நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னாரென்று அறியக்கூடவில்லை. இந்நூல் புறப்பாட்டு எனவும், புறம் எனவும், புறம் நானூறு எனவும் வழங்கப்பெறும்.
இந்நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுளுடன் சேர்த்து நானூறு அகவற் பாடல்கள் உள்ளன. 267 மற்றும் 268-ஆம் எண்ணுள்ள பாடல்கள் கிடைக்கவில்லை. பெண்பாலர்களும் அரசர்களும் பாடிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
புகலும் செய்திகள் மிகப்பல. அறம், பொருள். வீடு எனும் முப்பொருள்களையும் பற்றிய பாடல்கள் இந்நூலுள் காட்சியளிக்கின்றன. இந்நூல் கிடைத்திராவிட்டால் சங்க காலத் தமிழக வரலாற்றை நாம் இன்று அறிந்துள்ள அளவு அறிந்திருக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறலாம்.
நூல் தரும் சிறப்பு செய்திகள்
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
- அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
- மன்னனுயிர்த்தே மலர்தலை உலகம்
- யாதும் ஊரே யாவருங் கேளிர்
- நல்லது செய்தலாற்றீராயினும் அல்லது செய்தலோம்புமின்
என்பன போன்ற பொன்னையொத்த கருத்துக்கள் இந்நூலுள் பொதிந்து சிடக்கின்றன. முப்பத்தேழு பெண்பாற் புலவர்களுள் இந்நூலுள் மட்டும் 17 புலவர்கள் பாடியுள்ளனர். சொற்றொடரால் பெயர் பெற்ற புலவர்கள் மூவர் உளர். காலஞ்சென்ற ஜி.யூ.போப் துரையவர்களுக்குத் தமிழில் அன்புண்டாக இன்றியமையாகக் காரணமாக இருந்தவற்றுள் இப்புறநானூறும் ஒன்றாகும்.
பண்டைக்கால அரசியல், போர்த்திறம், கொடை வளம், குமுகாயப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றையும் கடையெழுவள்ளல்களின் வரலாற்றையும் தெளிவாகக் காட்டி நிற்கின்றது. உலகம் உய்ய வழிகாட்டும் உயரிய நீதிக் கருத்துக்களைப் பெற்றுச் செந்தமிழ் செல்வமாய், தமிழரின் வரலாற்றுக் கருவூலமாய், நாகரிகத் தொட்டிலாய், பண்பாட்டுப் பெருங்கோயிலாய் விளங்குகின்றது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பைந்தமிழ் நலத்தை சிறப்பிக்கக் கருதிய பாண்டியப் பேரரசர்கள் தமிழ் நலத்தாற் செறிவுற்றிருந்த சான்றோர்களும் சிலரை ஒருங்கே கூட்டித் தமிழ்ச்சங்கங்களை நிறுவித் தாய்மொழியாம் தன்னேரிலாத் தமிழ்மொழியைப் பேணிப் புரந்தனர். ஆய்வுக் களங்களையும், அறிவியல் மன்றங்களையும் அமைத்துச் சிறந்தனர். இவ்வாறு சங்கங்களை நிறுவித் தாய்மொழியைப் பேணிய பெருமை பழந்தமிழ்க்கட்கு மட்டுமே உரியதாகும். பதரும் களையும் தும்பும் தூசும் போக்கியப் பயனுள்ள நன்மணிகளை மட்டுமே தெரிந்தெடுத்து அவை என்றென்றும் நிலைத்து நிற்குமாறு தொகுத்துக் காத்த அந்தச் செயற்கரிய தமிழ்த்தொண்டினை, தமிழ்ப்பற்றினை, தமிழ் அறிவினை எண்ணும் போது நாம் பெரிதும் வியக்கின்றோம், பூரிப்பும் பெருமிதமும் அடைகின்றோம்.
பழந்தமிழ்ச் சான்றோர் தொகுத்துப் பேணிய தமிழ்ச் செல்வங்களுள் புறநானூற்றுத் தொகைநூல் ஒப்பற்ற ஒளிர்மணிக் கோவையாகும்.
அருளும் ஆண்மையும், பண்பும் பாசமும், பாவும் பாவலரும் இசையும் இசைப்போரும், அரசும், நாடும், மக்களும் மன்னரும், அன்பும். பண்பும் உயிர்ப்புடன் விளங்குகின்ற நிலைகளைப் புறநானூற்றுள் கண்டு களிக்கலாம் புத்துணர்வும், புதுவாழ்வும் பெறத் துடிதுடிக்கும் தமிழ் மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம். தென்னகத்தின் பண்டைய வீரவரலாற்றைக் காட்டி, நம்மையும் வீரஞ் செறிந்த தமிழராக்கும் தூண்டுகோல் புறநானூறு எனில், அது சாலவே பொருந்தும்.
தமிழறிந்தார் அனைவருமே புறநானூற்றைக் கற்க வேண்டும். புறநானூற்றுத் தமிழரைப் போன்றே அஞ்சா நெஞ்சமும், ஆராத் தமிழ்ப் பற்றும், மனவுணர்வும் பெற்றவர்களாகத் திகழ்தல் வேண்டும்.
புறநானூற்றில் பயின்றுவரும் பொன்மொழிகள்
1) "நிலம் பெயரினும் றின்சொற் பெயரால்" - இரும்பிடர்த்தலையார்
2) நீர் மிகின் சிறையும் இல்லை; தீ மிகின், மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை: வளி மகின் வலியும் இல்லை!" - ஐயூர் முடவனார்
3) புலிசேர்ந்து போகிய கல்லளைபோல ஈன்ற வயிறோ இதுவே. தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே" -காவற்பெண்டு
4) "உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்பே" -நக்கிரர்
5) ''மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே" - அறிவுடைநம்பி
6) "யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரார் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!" - கனியன்பூங்குன்றனார்
7) "நெல்லும் உயிரன்றே: நீரும் உயிரன்றே: மன்னன் உயிர்த்தே மலைதலை உலகம்" - மோசிகீரனார்
8) "எவ்வழி நல்லவர் ஆடவர்: அவ்வழி நல்லை வாழிய நிலனே" - ஔவையார்
9) "உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத் தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்"- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
இவ்வாறு பல பொன்மொழிகள் நிறைந்த சிறந்த புறநானூறு பாடல்கள் உலக மக்களின் பொக்கிஷம் ஆகும்.
ஆசிரியர் பற்றிய குறிப்புகள்
1.கபிலர்
'குறிஞ்சிக் கபிலர்' என அழைக்கப்படுபவர். குறிஞ்சித்திணை பாடுவதில் வல்லவர். இவர் பெரும்புலவருள் ஒருவர். இவர் வரலாற்றின் சிறு குறிப்பைப் பாடினோர் வரலாற்றுப் பகுதியில் காணலாம். அச்செய்யுட்களுள், பொருந்தில் இளங்கீரனார் என்பவர். தாம் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய செய்யுளில் 'செறுத்த செய்யுட் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' என (53) இவரைப் போற்றுகின்றனர். 'புலன அழுகற்ற அந்தணாளன்' என்கிறார் நப்பசலையார் (126) பொய்யா நாவிற் கபிலன் (174) எனவும் அவர் மீண்டும் போற்றுகின்றார். இவ்வாறு பிற்காலப் புலவரும் போற்றிய சிறப்பினைப் பெற்றச் சான்றோர் இவர் ஆவார்.
2.மருதம் இளநாகனார்
இவர் மதுரையில் இருந்தவர். மதுரை மருதன் இளநாகனார் எனவும் கூறப்பெறுவர். அகநானூற்றுள் 23 கலித்தொகையுள் மருதம் பற்றிய செய்யுகள் 35 குறுந்தொகையுள் 4. நற்றிணையுள் 12 ஆகியவும் இவர் பாடியனவாகக் காணப்பெறும் மருதத்திணைச் செய்யுட்கள் பாடுவதில் இவர் வல்லவர்.
இறையனார் அகப்பொருளுக்கு உரை இயற்றியவருள் இவரும் ஒருவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனையும், நாஞ்சில் வள்ளுவனையும் இவர் பாடியுள்ளார். செந்தில் நெடுவேள் நிலைஇல காமர் வியன்துறைக் கடுவளி தொகுப்பு ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பலவாக வாழிய என இவர் நன்மாறனை வாழ்த்துகின்றார். இதனால் குமரனுக்கும் 'நெடுவேள்' என்னும் பெயர் உண்டென்று அறிகின்றோம்.
'கலிகெழு கடவுள் தந்ததைவிட பலிகன் மாறிய பாழ்படுபொதியில் நரை மூதாளர் நாயிடக் குழிந்த வல்லின் நல்லகம்' எனக் (புறம் 56) கூறும் இவரது சொற்கள். அக்காலத்துப் பொதியிலையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவனவாகும். 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம், அதனால், நமரெனக் கொல் கோபாதும், பிறர் எனக் குணங் கொல்லாதும், ஓர் அரசன் விளங்க வேண்டும்' என்று அறிவுறுத்துகின்றார் இவர். (புறம் 55)
ஓடுகன்னியை அவளைப் பெற்றோர் தர மறுத்தலால், வந்தோர் போரிட, அவ்வூரே அழிந்ததனை 'மரம்படு சிறுதீப்போல் அனங்காயினள் தான் பிறந்த ஊர்க்கே' (புறம் 339) என்று கூறியவர். இவர், 'ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி' என்ற செய்தியைக் கூறியவரும் இவரே (5-216)
3. பெருஞ்சித்திரனார்
சித்திரனார் இவர் பெயர், பெருமை இவரது தகுதி நோக்கி அமைந்த சிறப்புப் பெயராகும். சித்திரை ஓரையில் பிறந்தவர் ஆகலாம். வள்ளல் குமணனைப் பாடிப் போற்றி, அவனது தலைதந்த பெருங்கொடைப் பண்பை எடுத்துக் கூறி, அழியாப்புகழ் நிலை பொருத்தியவர் இவர், வெளிமான் துஞ்சிய பின் இளவெளிமானிடம் சென்று அவனுக்கு அறிவுரை புகட்ட குமணன் தந்த யானையை அவனது காவல் மரத்தில் கட்டிவிட்டு வந்தது. இவரது தறுகண்மையினைக் காட்டுவதாகும். அதியமான் நெடுமான் அஞ்சி. இவரைக் கண்டு பாரட்டாது கொடுத்த பரிசிலை ஏற்க மறுத்து, 'காணாது ஈந்த இப்பொருட்டு, யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்' என்று கூறியவர் இவர். இதனால் இவரது புலமையுள்ளம் எத்துணை சிறப்புடையது என்பது விளங்கும். பொருட் செறிவும், உள்ளத் தெரிவும் அமையச் சிறந்த செய்யுட்களைச் செய்தவர். வறுமையினும், தான் பெற்ற பிள்ளையை மறப்புலி உரைத்தும் மதியங்காட்டியும்' தேற்றும் தாயைக் காட்டும் இவரது செய்யுளால், இவர் குடும்பம் முதற்கண் வறுமை நிலையை விளக்கும் மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம் புகழ் நீறீ இத்தாம் மாய்ந்தனரே' என்னும் வாக்கு இவரதேயாகும் (புறம் 165) முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலம் என்பது, வறுமையினும் செம்மை மிக்க இவரது பண்பை உணர்த்தும் (புறம்-205).
4. கழைதின் யானையார்
இவர் வல்வில் ஓரியைப் பாடியவர். மூங்கிலைத் தின்னும் யானைக் குறித்து, நயமாக உவமித்துப் பாடிய சிறப்பால் இப்பெயரைப் பெற்றனர் போலும் ஈயென இரத்தல் இழிந்தன், அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று: கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதினும் உயர்ந்தன்று' எனக் கொடைக்கண்ணும் ஒரு சீரிய நெறியைக் கண்டு கூறியவர் இவர்.
5. பெருந்தலைச் சாத்தனார்
அகநானூற்றுள் இரண்டும், நற்றிணையுள் ஒன்றும் இவர் பாடிய பிற செய்யுட்கள். இவர் சாத்தனார் என்னும் பெயரினர், பெருந்தலை என்பது தலைமை காரணமாக வந்த பெயராகலாம். தென்னவன் மறவனான கோடைப் பொருநனைப் பற்றி அகநானூற்றுச் செய்யுளுள் (13) இவர் மிகவும் அருமையாக எடுத்துக் கூறுகின்றார். மணலில் தலைவனின் தேர் ஒலியோடு வருதலை நயமாக, திரிமரக் குரலிசை கடுப்ப. வரிமணல் அலங்குகதிர்த் திகிரி யாழி போல வருங்கொல் தோழி என (அகம்.224) உவமித்தவர் இவர்.
கருவிளையின் மலர் காற்றில் ஆடுவதனை 'ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல் வர என்றும் நயமாகக் கூறுவர். 'ஆடுநனி மறந்த எனத் தொடங்கும் இவரது புறப்பாட்டு, இவரது வறுமை நிலையை விளக்கும் மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீ இத்தாம் மாய்ந்தனரே' என்னும் வாக்கு இவரதேயாகும் (புறம் 165). 'முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலம்' என்பது. வறுமையினும் செம்மைமிக்க இவரது பண்பை உணர்த்தும் (புறம்-205).
